தமிழ்நாட்டின் வளர்ச்சி சென்னை போன்ற குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே நின்றுவிட கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது. வளர்ச்சி பரவல் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெற்றிகரமாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு பல்லாயிரம் கோடி கணக்கிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூரில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு TN Rising conclave எனப்படும் தன்னுடைய மூன்றாவது மாவட்ட ரீதியான முதலீட்டாளர் மாநாட்டை நடத்த இருக்கிறது.
கோவையில் நடக்கும் இந்த மாநாட்டில் எலக்ட்ரானிக்ஸ், பொது உற்பத்தி , ஜவுளி மற்றும் ஏரோஸ்பேஸ்,பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதே தங்களின் கவனமாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் ஒரு தொழில்துறை மையம் என்பதிலிருந்து முழுமையான பொருளாதார இயந்திரமாக மாறி வருகிறது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். கோவை உலகளாவிய gcc மையங்கள் மற்றும் நவீன தொழில்களை கொண்ட ஒரு நகரமாக மாறி வருகிறது என கூறி இருக்கும் அவர் இந்த மாவட்டத்திற்கு நேரடியாக உலக முதலீட்டாளர்களை கொண்டு வருவதன் மூலம் உள்ளூரை சேர்ந்த திறன்மிகு நபர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் ,உள்கட்டமைப்பு மற்றும் MSME நிறுவனங்களை சர்வதேச மதிப்பு சங்கிலிகளோடு இணைக்க முடியும் என கூறியிருக்கிறார்.
தூத்துக்குடி . ஓசூரை தொடர்ந்து மூன்றாவது மாவட்ட ரீதியான முதலீட்டாளர் மாநாடாக இது இருக்கும் என கூறி இருக்கும் அவர் சென்னை மட்டுமே வளர்ச்சியின் மையமாக இருக்கக் கூடாது பொருளாதார வளர்ச்சியும் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசின் இலக்கை நோக்கியே இந்த மூன்றாவது மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 32,554 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன, அதே போல ஓசூரில் நடந்த மாநாட்டில் 24,307 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அடுத்ததாக கோவையிலும் இதே போல பல்லாயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோயம்புத்தூரில் 25க்கும் அதிகமான ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன . பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய அலுவலகங்களை கோவையில் விரிவாக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன . குறிப்பாக கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படக்கூடிய ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது . இதனால் கோயம்புத்தூரில் அலுவலக இடங்களுக்கான தேவை உயர்ந்திருக்கிறது . இந்த ஆண்டு கோயம்புத்தூரில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலீட்டாளர் மாநாட்டை அடுத்து அலுவலக இடங்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.