ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, துவக்கி வைத்தார்.
ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழா
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் அமைந்துள்ள நுண்உரம் தயாரிப்பு மையத்தில் விருதுநகர் நகராட்சி, விருதுநகர் லியோ கிளப் சரஸ்வதி அம்மாள் லையன்ஸ் மேல்நிலைப் பள்ளி பசுமை படை மாணவர்கள் இணைந்து நடத்தும் ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, இன்று(19.11.2025) துவக்கி வைத்தார்.
மரங்களை அதிகப்படுத்த திட்டம்
”விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் வனப்பகுதிகள் குறைந்த அளவில் இருப்பதாலும், இவ்வனப் பகுதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அரசு மட்டுமல்லாமல் அவற்றுடன் விவசாயிகள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் என அனைவராலும் மரக்கன்றுகள் பல்வேறு கட்டங்களாக நடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவை முன்னிட்டு, 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களின் முக்கியத்துவம்
மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கவும், மண் அரிப்பை கட்டுபடுத்தவும், மண் வளத்தினை மேம்படுத்தவும், நிலத்தடி நீரினை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன. குறிப்பாக பனை மரத்திலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் பல மருத்துவ குணநலன்களை கொண்டுள்ளது. எனவே, நம்முடைய மாணவச் செல்வங்கள் பனை மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு செயலாற்றினால் மாணவர்களின் எதிர்காலம் பயனுடையதாக மாறும்” என மாவட்ட தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அ.அம்சவேணி, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.