முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,”  நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும். இதில் 17 அமர்வுகள் இடம் பெற உள்ளது. அம்மாவின் ஆட்சி இருக்கும் பொழுது காவிரி உரிமைகளை மீட்டு எடுக்கப்பட்டது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை புரட்சித்தலைவி அம்மா மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார்.  அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதன்மூலம் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது.  ஆனால் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்தாண்டுகால பதவி முடியும் காலம் வரப்போகிறது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி உரிமை பிரச்சனை பற்றி வாய் திறந்தது கிடையாது. முல்லை பெரியார் குறித்து வாய் திறக்கவில்லை, கச்சத்தீவு பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை, ஆனால் புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதனைத் தொடர்ந்து அரசின் சார்பிலும் வருவாய் துறையும் இதில் இணைத்தார். தமிழக மக்களிடத்தில் வாக்குகளை பெற்று வெற்றியடைந்த திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்ட தொடரில் ஜீவாதார பிரச்சினை பற்றி பேசுவார்களா?




கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 20.6.2023 அன்று மத்திய நீர்வழித்துறை அமைச்சருக்கு அதிர்ச்சியூட்டும் கடிதத்தை எழுதி உள்ளார். அதில் மேகதாது அணை கட்ட விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேகதாது பிரச்சனையில் தமிழகம் இரட்டை வேடம் போடுகிறது, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தமிழகம் சட்ட விரோதமாக செயல்படுத்தி வருகிறது. மேகதாது கட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். 8 கோடி மக்கள் மீது பழிச் சுமையை கர்நாடக அரசு சுமத்தி உள்ளது. ஆனால் முதலமைச்சர் சிறுகண்டனம், கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது. வாய் திறந்து பேச வேண்டும் கர்நாடக துணை முதலமைச்சர் பேசுவது வடிகட்டின சுத்த பச்சைப்பொய் என்று கருத்து சொல்ல வேண்டாமா? செந்தில் பாலாஜிக்கு காட்டும் அக்கறையை, காவிரி உரிமை பிரச்சினையில் காட்ட முதலமைச்சர் நேரம் செலுத்தவில்லை, 





எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது 4.9.2018, 8.10.2018, 17.9.2018, 31.10.2018, 27.11.2018 போன்ற பல்வேறு காலகட்டங்களில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதனை ஒப்புக்கொண்ட காவிரி ஆணைய தலைவர் தமிழக அரசு ஒப்புதல் பெறாமல் அணை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறிவிட்டார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அணையை கட்டுவோம் எனக் கூறுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தமிழக உரிமை விட்டுக் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. அணைக்கட்ட 9,000 கோடியை கர்நாடகா ஒதுக்கிவிட்டது. கர்நாடாகவில் உள்ள கருணாநிதி குடும்ப சொத்துக்கள் பாதிக்கும் என்பதால் திமுக வாய் பேசாமல் பேச மடந்தையாக உள்ளது” என கூறினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.