ஜாமினில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மேலும் ஒரு வழக்கில் கைது செய்வதற்காக தேடும் சிதம்பரம் காவல்துறையினர்.  சூர்யாவுடன் தங்கியிருந்த பாஜகவினரிடம் காவல்துறையினர் விசாரணை -  காவல்துறையினர் தாக்கியதாக கூறி பாஜகவினர் மதுரை அரசு மருத்துமனையில் அனுமதி.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குறித்து அவதூறு கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் நிபந்தனை ஜாமினில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரையில் தங்கி கையெழுத்திட்டு வருகிறார். இதனிடையே எஸ்.ஜி.சூர்யா சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் பிரச்னை தொடர்பாக தவறான கருத்துகளை பதிவிட்டதாக, சிதம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் சிதம்பரம் காவல்துறையினர் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்வதற்காக மதுரை வந்தடைந்தனர். இதை தொடர்ந்து எஸ்.ஜிசூர்யா தங்கியிருந்த மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள தங்கு விடுதியில் எஸ்.ஜி.சூர்யாவை தேடிச் சென்றனர்.



 

அங்கு சென்று அவர் தங்கியிருந்த அறையில் தேடி பார்த்தபோது, அவர் இல்லாத நிலையில் அறையில் தங்கியிருந்த இரு பாஜக நிர்வாகிகளை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது தகவலறிந்த பாஜகவினர் சம்பவ இடத்தில் கூடி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர். இதனை தொடர்ந்து பாஜகவினர் இருவரும் விசாரணை என்ற பெயரில் சிதம்பரம் காவல்துறையினர் தாக்கியதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 




 

இதனை தொடர்ந்து சிதம்பரம் காவல்துறையினர் எஸ்.ஜி சூர்யாவை மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் தேடிவருகின்றனர். மேலும் அவரது செல்போன் எண் பயன்படுத்தும் இடத்தை தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். நிபந்தனை ஜாமினில் இன்று காலை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வரும்போது சூர்யாவை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய சிதம்பரம் காவல்துறையினர் தேடிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.