மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட உள்ள ரூ.166 கோடி மதிப்பிலான கூடுதல் நீதீமன்ற கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் “தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளையை தொடங்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், ”உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க அரசியலமைப்பு சட்ட திருத்தம் தேவைப்படுகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் வட்டார மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஆனது ஒட்டு மொத்த இந்தியாவுக்குமானது என்பதே எங்கள் நிலைப்பாடு. உச்ச நீதிமன்ற நடைமுறைகளை சட்ட மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.