தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று ஆகும். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் இந்த பணியை சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும். சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம். காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும். காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது உணவு பரிமாறுவதற்கு எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதவி செய்யலாம். மேலும் சுகாதார குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.