தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கொண்டனர்.



 

 

குறிப்பாக இந்த புகைப்பட கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் சென்னை மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் பதவி வகித்த போது செய்த திட்டங்கள், கட்சிப் பணிகள், கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான படங்களும் அவர் பேசிய வாசகங்களும் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.



 

மேலும் தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களோடும் பல்வேறு மாநில முதலமைச்சர்களோடும், நடிகர்களான சத்யராஜ், விவேக், ரஜினி, கமல், கிரிக்கெட் வீரர் தோனி, ராணி எலிசபெத் உள்ளிட்டோருடன் முதல்வர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மிஷா காலகட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறைச்சாலையில் அனுபவித்த கொடுமைகள் ஒலி, ஒளி காட்சிகளுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் நிற்பது போன்ற சிலையும், சைக்கிள் ஓட்டி சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போன்ற சிலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.



 

இந்த கண்காட்சியை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.