"முறுக்கு, அதிரசம், சீடை, சீப்பு சீடை, இனிப்பு சீடை, சின்ன சீடை, கை முறுக்கு, தேன் குழல், மாவுருண்டை' என பல்வேறு ஐடங்களில் பாரம்பரிய செட்டிநாடு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. கல்யாண சீர், தீபாவளி சீர், பொங்கல் சீர் என்று எல்லா செட்டிநாடு சீர் வரிசையிலும் முதல் வரிசையில் செட்டிநாடு பலகாரங்கள் நிற்கும். செட்டிநாடு பலகாரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பண்டமாகும். தென் தமிழ்நாட்டு சமையல் விருந்தில் செட்டிநாட்டு சமையலுக்கு தனி மவுசு உண்டு. மேற்கத்திய பண்டங்களை சாப்பிட பழகி இருந்தாலும் விசேஷ தினங்களில் பழமை மாறாத பலகாரங்களையே விரும்பி சாப்பிட நினைப்பது அனிச்சையே. அப்டியான செட்டிநாடு பலராங்கள் பற்றி காரைக்குடி அழகு ஸ்நாக்ஸ் உரிமையாளர் அலமேலு நம்மிடம்....,"கொரோனா சமையத்தில் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகள் என்பது மந்தமான நிலையில்தான் இருந்து வருகிறது. அதே போல் தான் செட்டிநாடு பலகாரங்கள் செய்யும் தொழிலும் தடுமாறியது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட பின், சற்று மூச்சு விட்டு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. செட்டிநாடு பகுதி கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்டோர் பலகாரம் செய்வதை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர்.
பலகாரம் செய்வர்களின் எண்ணிக்கை தீபாவளி சமயத்தில் இன்னும் கூடும். கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய வியாபாரம் இல்லை என்றாலும் தற்போது பராவாயில்லை. இந்தாண்டு சின்ன கை முறுக்கு என்ற ஐடத்த ஸ்பெசலா பண்ண உள்ளோம். அதே போல் மகிழம்பூ முறுக்கிலும் மாறுதல்கள் கொண்டுவரவுள்ளோம். ஏற்கனவே செய்ற கைமுறுக்கு அளவ மாத்தி செய்ய உள்ளோம், அவ்வளது தான். அதனால் சுவையில் மாறுதல் இருக்காது. செட்டிநாடு பலகாரம் தற்போது தான் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நகரத்தார் வீடுகளில் பலகாரம் செய்வதை ஒரு சடங்காகவே செய்வார்கள். பலகாரம் செய்யப்படாத வீடுகள் இருக்காது. தற்போது கால சூழல் மாறியதால் இதனை ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுக்கிறோம். செட்டிநாடு பலகாரங்களில் குறிப்பிட்ட சில பண்டங்களை தவிற மற்ற அனைத்து பண்டங்களும் 25 முதல் 30 நாட்கள் வரை தாங்கக்கூடியது. செட்டிநாடு பகுதியில் செய்யப்படும் பண்டத்திற்கு தனிச்சுவை உண்டு. இதில் மணகோலமும் ஒன்று. பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை அரிசி, வெல்லம், பொட்டுக் கடலை, தேங்காய், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது.
பார்க்க காராசேவ் போல தெரியும் ஆனால் சுவைத்தால் தான் இனிப்பு என்று தெரியும். காரைக்குடி பகுதியில் செய்யப்படும் உணவு உள்ளூர்களில் இருந்து வெளிநாடுகள் வரை கொண்டு செல்லப்படுகிறது. நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதால் செட்டிநாடு பலகாரங்களை கொண்டு செல்கின்றனர். உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாமல் மாறாக சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். மணகோலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் ஊட்டச்சத்து அளிக்கும் உணவாகும். குழந்தைகளுக்கு மணகோல ஸ்நாக்ஸ் மூலம் சக்தியை வழங்கலாம். அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு சுவை என்பதால் தவிர்க்கமாட்டார்கள். மணகோலம் பெரும்பாலும் நேரடியாக கடைகளில் கிடைக்காது. உற்பத்தி செய்யும் இடங்களில் தான் வாங்க வேண்டும். இதை மொத்த ஆர்டராக கொடுப்பதால் படி கணக்கில் தான் கொடுப்போம் 20 படி, 30 படி என்று தேவைக்கு தகுந்தவாறு வாங்கிக்கொள்வார்கள். ஒரு படி மணகோலம் 250 ரூபாய் என்று கொடுப்போம். கிலோ கணக்கிலும் கொடுப்பதுண்டு. தற்போது அதிக அளவு கிலோ கணக்கிலேயே வழங்குகிறோம். 1 கிலோ மணகோலம் 500 ரூபாயாகும். காரைக்குடி பகுதியில் செட்டிநாடு பலகாரங்களை தற்போது குடிசை தொழிலாக மாறியுள்ளது.
பல்வேறு இடங்களில் டீலர்களும் உருவாகியுள்ளனர். நான் எம்.எஸ்.சி., பி.ஏட்., முடித்துள்ளேன். இருந்தாலும் என் கணவருடன் இணைந்து இந்த தொழிலையே முழு நேரமாக பார்க்கிறேன். தனியாக இடம் பிடித்து இந்த தொழிலை செய்கிறோம். எங்களுடைய இடத்தில் அதிகளவு பெண்கள் தான் பணி செய்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பலகாரங்களை செய்வதால் வீட்டு பக்குவத்தில் செய்ய முடிகிறது. 15 வருடமாக கேட்டரிங் தொழில் செய்து வந்த நாங்கள் கடந்த 6 வருடமாக செட்டிநாடு பலகாரம் செய்வதை கூடுதல் பணியாக செய்கிறோம். சேர்க்கப்படும் ஒவ்வொரு சேர்மானங்களும் சிறந்த பொருளாக தேர்வு செய்து பண்டங்கள் தயார் செய்கிறோம். பலகாரத்தில் சேர்க்கப்படும் தண்ணீர் முதற்கொண்டு சரியான தேர்வு முறையை கையாள்கிறோம். எங்களிடம் பண்டங்கள் சுவையாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 'மதராசப்பட்டினம்' உணவு திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கை மாவட்ட சார்பாக நாங்கள் தான் கலந்துகொண்டோம். மணகோலம், சீப்பு சீடையையும் பலரும் வித்தியாசமான நொறுக்குத் தீனியாக உள்ளதென்று பாராட்டினர்.
"அலமேலு அவர்கள் சொன்ன மணகோலம் செய்முறை பக்குவம்" ஒரு கிலோ மணகோலத்திற்கு, பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம்பரும்பு 200 கிராம், கடலை பருப்பு 100, குண்டு பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பொட்டுக் கடலை கால் கிலோ, தேங்காய் - 2, ஏலக்காய் 25.கிராம், தேவையான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப் பருப்பு , உளுந்தம் பருப்பு, கடலை பருப்பை தனியாக வருத்துக்கொள்ள வேண்டும் இதனை பச்சரியுடன் மாவு போல அரைக்கவேண்டும். நன்றாக சலித்த பின் உப்பு சேர்த்து நல்ல பதமாக பிணைய வேண்டும். முறுக்கு மாவு போல ஆனவுடன் மணகோல கட்டையில் வைத்து எண்ணையில் சுட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வெல்லத்தை நன்கு காய்ச்சி நல்ல திரளாத பதத்திற்கு எடுத்துகொள்ள வேண்டும். இதனை எண்ணையில் சுட்டு எடுத்த பொருளின் மீது ஊற்றிவிட வேண்டும். அதற்கு மேல் இடித்த ஏலக்காய், பொட்டுக்கடலை, பல்லு பல்லாக கீறிக்கொண்ட தேங்காய் உள்ளிட்ட பொட்களை மொத்தமாக கொட்டி கிளறி விடவேண்டும். சிறிது நேரத்தில் மணகோலம் சாப்பிட தயாராகிவிடும். பொரித்து எண்ணைக்கு பதில் நெய்யும் பயன்படுத்தலாம்.
காரைக்குடி, கோட்டையூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர் உள்ளிட்ட செட்டிநாடு பகுதியில் செட்டிநாட்டு பலகாரம் அதிகளவு செய்யப்படுகிறது. காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதி பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பாய் அமைகிறது. செட்டிநாடு பகுதியில் கிடைக்கும் தண்ணீர் சுவையில் முக்கியத்துவத்தை கொடுப்பதாக நம்புகிறார்கள். புதுமண தம்பதிகளின் தலை தீபாவளியை செட்டிநாடு பலகாரத்தோடு பாரம்பரியமாக கொண்டாடுகிறார்கள் என்பதே நிதர்சனம். காரைக்குடி செட்டிநாடு பலகாரங்கள் ஆத்தங்குடி கூடைகளில் வைத்து பார்சலாக கொடுக்கப்படுவது, கண்களை கவர்கிறது. தீபாவளிக்கு செட்டிநாடு ஸ்நாக்ஸ் கொஞ்சம் எடுத்துப்போம்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!