மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியில்  உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்னை  நடைபெறும் நிலையில் அண்மையில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டனம் தெரிவித்து இருந்தார்.



இந்நிலையில் திருமங்கலம் , கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை  அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார். இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது, அங்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் எனவே பந்தல் அமைக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

 

இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.



அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது தொண்டர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டு தள்ளுமுள்ளு சம்பவம் நடைபெற்றது.




இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இதனால் அதிமுக தொண்டர்களை  போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பேருந்துகளில் ஏற்றினர். தொடர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.