மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பற்றி எரிந்து மலை முழுவதும் தீபற்றி எரிந்தது. இந்த தீயிலிருந்து தற்காத்து கொள்ள மலை அடிவாரத்திற்கு வந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண்  புள்ளிமான் ஒன்று மலை அடிவாரத்தில் உள்ள ஏ.இராமநாதபுரம் கிராமத்தின் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.




தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் உயிரிழந்த புள்ளி மானை மீட்டு உடற்கூறாய்விற்காக வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புள்ளி மான் மீது பேருந்து மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைப்பகுதிக்கு வந்த புள்ளிமானை நாய் துரத்தி வருவது போன்றும், ஓடி வரும் போது சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீடப்படும் காட்சிகளும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.





மேலும் நேற்று உலக வன தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் வனத்தில் மர்ம நபர்கள் வைத்த தீயின் காரணமாக தரைப்பகுதிக்கு வந்த புள்ளிமான் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மேலும் மலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல்வேறு வன உயிரினங்களும் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவிக்கும் வனத்துறை அதிகாரிகள் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும் , விபத்தை ஏற்படுத்திய பேருந்து குறித்தும் 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அரிய வகை விலங்குகளை வனத்துறையினர் பாதுகாக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.