காதலன் போல் நடித்து, காதலித்த பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி திமுக நிர்வாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து 1 வருட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களும் தற்போது விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விருதுநகர் மேல தெருவை சேர்ந்த திமுக நிர்வாகி ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். பால் பண்ணை நடத்தி வரும் ஹரிஹரன் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி உடலுறுவு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்த ஹரிஹரன், தனது நண்பரான திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவிற்கு அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து அந்த பெண் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை பேஸ்புக், வாட்ஸாப்பில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி ஜுனைத்தும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.



ஹரிஹரன், ஜுனைத் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது இந்த வீடியோ மெல்ல மெல்ல ஒவ்வொரு நபர்களிடமும் பரவ, நண்பர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் மாடசாமி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார், அவரும் இந்த வீடியோ விவகாரத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீடியோவை வைத்து மிரட்டி 8 நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர், அதில் 9ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என்பது தான் மிக துயரமான விஷயம். இத்தனை கொடுமைகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் மூலம் தற்போது வரை அனுபவித்து வந்த பெண், இவர்கள் பால் பண்ணை, ரைஸ் மில், கட்சி பதவி என செல்வாக்கோடு இருந்ததால் வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு பெண்மணி தனக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல, அவர்கள் விருதுநகர் காவல்துறையின் பார்வைக்கு இதனை எடுத்து வந்துள்ளனர்.


இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீதும் வழக்கு பதிவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரும் விசாரணையில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் நான்கு பேரும் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


பொள்ளாச்சியில் நடந்தது போன்று, விருதுநகரில் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழ்நாட்டில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.