மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்தை காவல்துறையினர் சரிவர விசாரிக்கவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், வழக்கை முடித்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த சுடலைமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கோயிலின் 5 நுழைவு வாயில் மற்றும் கோயிலுக்குள் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


தீப்பெட்டி, சிகரெட், பீடி உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில், கடந்த 02.02.2018ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவு சேதமடைந்தது. இந்த விபத்தில் 52 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. 56 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமானது.


இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி அரசுக்கு அளித்த அறிக்கையில், தீ விபத்துக்கும், சேதத்துக்கும் கோயில் இணை ஆணையர் மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆகம விதிகளை பின்பற்றாமல் கோயில் வளாகத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கியதே தீ விபத்துக்கு காரணம். மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசாரின் விசாரணை முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தீ விபத்திற்கு யாரும் காரணம் இல்லை என வழக்கை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை முடித்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்தனர்.


 




மற்றொரு வழக்கு







காட்டுநாயக்கர்  சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை  ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த (ராஜேஸ்வரி வயது 60) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனவில், “நான் 1983-ல் காட்டுநாயக்கர் வகுப்பை சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழை ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெற்றேன்.

 

நான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அனைத்தையும் காட்டுநாயக்கர் வகுப்பினை சேர்ந்தவர் என உள்ளது. இந்த நிலையில் 1984-ல் யூகோ பேங்க் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

 

1997-ல் எனது ஜாதி சான்றிதழை சிவகங்கை மாவட்ட ஆட்சியரால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி படுத்தபட்டது. இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர்  முழுமையான விசாரணை செய்யாமல் எனது ஜாதி சான்றிதழ் ரத்து செய்ய பரிந்துரை செய்து உத்தரவிட்டார். 

 

அதன் பேரில் சிவகங்கை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு எனது ஜாதி சான்றிதழ் ரத்து செய்து 2004 ஆம் ஆண்டு உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் எனது ஜாதி சான்றிதழ் சரியானது தான்ன உத்தரவிடப்பட்டது.

 

இதே போல் யூகோ பேங்க் தரப்பில்  ஜாதி சான்றிதழ் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் என்னுடைய ஜாதி சான்றிதழ் உண்மையானது என தெரிவித்தனர். இதனை  கருத்தில் கொள்ளாமல் 2022 ஜூன் 24 தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை தமிழ்நாடு அளவிலான ஆய்வு குழு-எனது ஜாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

 

எனவே எனது ஜாதி சான்றிதழை ரத்து செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை தமிழ்நாடு அளவிலான ஆய்வு குழு-II ன் உத்தரவிட்டதற்கு  தடை விதித்து , அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதிகள், மனுதாரரின் அனைத்து ஆவணங்களும் காட்டுநாயக்கர் என உள்ளபோது ரத்து செய்வதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். பின்னர்  மனுதாரரின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை தமிழ்நாடு அளவிலான ஆய்வு குழு-IIன் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர் மேலும் வழக்கு குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை தமிழ்நாடு அளவிலான ஆய்வு குழு-II பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.