தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் துணவட்டாட்சியர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.
மேலும் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 இடங்களில் நடந்த நிலம் அபகரிப்புக்கும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த 3 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன.
இதையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இதில், வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில், தொடர்புடைய அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் (வயது 57), பாலார்பட்டியை சேர்ந்த நில அளவையர் பிச்சைமணி (45), நில அளவையரின் உதவியாளரான டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த அழகர் ஆகிய 3 பேரையும் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரையும் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் 3 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆவணங்களின் அடிப்படையிலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்