காளையார் கோவில், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கே.கே.நகர் சந்திப்பிலுள்ள மதுபான கடையை மூடவும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற கோரிய வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட மதுபான கடை மேலாளர் ஆகியோர் சட்டத்திற்கு உட்பட்டு 2 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் அழகாபுரியைச் சேர்ந்த சகாயமேரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கே.கே.நகர் சந்திப்பில் டாஸ்மாக் நிர்வாகம் பார் உடன் கூடிய மதுபான சில்லறை விற்பனைக் கடையை நிறுவியுள்ளது.

இந்தப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இதனால், தினசரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும், பெண்களும் இந்த பகுதியில் அதிகம் சென்று வருகின்றனர். மேலும் மதுபான கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மதுபான சில்லறை விற்பனை கடையினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, காளையார் கோவில், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கே.கே.நகர் சந்திப்பிலுள்ள மதுபான கடையை மூடவும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுபான கடையை மூடுவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட மதுபான கடை மேலாளர் ஆகியோர் சட்டத்திற்கு உட்பட்டு 2 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.