கம்பம் அரசு மருத்துவமனை கட்டிட விபத்து நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கட்டிட ஒப்பந்ததாரர் தேனியை சேர்ந்த பாண்டியராஜன் , இஞ்சினியர் வெங்கடாசலம், துணை இஞ்சினியர் மணிவண்ணன், நவீன், செல்வம் உள்ளிட்ட 4 பேர் மீது கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு .விபத்தில் உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணம் தரவுள்ளதாக தேனி எம்பி பேட்டி .கட்டிடத்தில் வேலை செய்த போது வேலையாட்களின் கவனக்குறைவாகவே இந்த விபத்து நடந்ததாகவும் தேனி எம். பி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 12 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள்தோறும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டிடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேஷன் பகுதியில் கட்டிடப் பணிகளை செய்து கொண்டிருந்தனர். திடீரென அந்த கட்டிடம் இடிந்து அவர்கள் மீது விழுந்து கட்டிட சுவருக்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து அருகில் பணிபுரிந்த பணியாளர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நம்பிராஜனை பிரேதமாக மீட்டனர். இதனை தொடர்ந்து மேலும் விபத்தில் காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கட்டிட விபத்து நடந்த இடத்தை தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேனி எம்பி.தங்கதமிழ்வன் கூறுகையில் , நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், கட்டிடம் மிகவும் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், வேலையாட்களின் அலட்சியமான பணியே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார்.
மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தை மீண்டும் ஆய்வு செய்த பின் அதற்கான கட்டிட தரச்சான்று தான் பெற்ற பின்பே மீண்டும் கட்டிட பணியை துவக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த சூழலில் கட்டிட விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒப்பந்ததாரர் மூலமாக ருபாய் 10 லட்சம் இறந்தவரின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும், அரசு சார்பில் உரிய நிவாரண தொகை பெற்று தரப்படுவதாகவும் உறுதி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் இப்ராஹிம் என்பவர் தங்க தமிழ்செல்வனை பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டது தெரிந்தும் இஞ்சினியர் வேலையாட்களின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என கூறுவது மிகவும் பொய்யானது எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு பதட்டமான சுழல் நிலவியதால் தேனி எம்.பி தங்க தமிழ்செல்வன் அங்கிருந்து அவசரமாக கிளம்பி சென்றார். மக்கள் சிகிச்சைக்காக பயன்படும் வகையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஆரம்பத்திலேயே இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன். தற்போது கட்டப்படும் கட்டிடத்தை இடித்து புதிதாக தரமான கட்டிடத்தை கட்டித்தர வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.