சிவகங்கை சேர்ந்த செல்வம் மின் விபத்தில் உயிரிழந்த தனது மகன் முத்துகிருஷ்ணனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் ," மனுதாரரின் மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த 2014 ஆகஸ்ட் 10ஆம் தேதி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அருகில் விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த இரும்பு வேலியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையும் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாகவே மனுதாரரின் மகன் உயிரிழந்துள்ளார் என உறுதி படுத்தியுள்ளது. மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே தனது மகனின் இறப்புக்கு காரணம் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மின்வாரியம் தரப்பில் ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மோட்டாரை இயக்குவதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. அது முழுவதுமாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. இதில் மின்வாரியத்தின் அலட்சியம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து தரப்பில் இது கடவுளின் செயல். நாங்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதே மின் விபத்து ஏற்பட்டு மனுதாரரின் மகன் உயிரிழக்கக் காரணம். ஆகவே மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6% வட்டியுடன் கணக்கிட்டு, சிவகங்கை மாவட் சிங்கம்புணரி தாலுகா ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சிவகங்கை ஏ.தெக்கூர் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்கு உள்ளாக அகற்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஏ. தெக்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோவிலின் அறங்காவலர் தணிகாச்சலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய் ஆவணத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோவில் பெயருக்கான சொத்துக்களை மீட்டெடுக்கவும் உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு மனுதாரர் குறிப்பிடும் சொத்தில், 19 ஆம் நூற்றாண்டில் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அந்த நிலம் புறம்போக்கு நிலம் என்றும், இந்த இடம் ஊரணி என வகைப்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், அப்பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. தற்போது வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் மனுதாரர் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். இருப்பினும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட சொத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு தரப்பில், "ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தின் அடிப்படையில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு போதுமான அளவு கால அவகாசம் வழங்கி, 8 வாரங்களுக்கு உள்ளாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்படுகிறது. அதேபோல ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோவில் பெயரிலான சொத்துக்களை மீட்பது தொடர்பாக திருப்பத்தூர் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.