நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 




மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும்,  வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க  ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி தேர்தல் முடிந்த நிலையில் யார் அந்த பெண் மேயர் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது.




இந்த ரேசில் மதுரை முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மருமகள் 32-வார்டு கவுன்சிலர்  விஜய மவுஸ்மி,  அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவாளர் 5-வது வார்டு கவுன்சிலர்  வாசுகி சசிகுமார், அமைச்சர் தங்கம் தென்னரசு உறவினர் 17-வது வார்டு கவுன்சிலர் ரோகிணி பொம்மதேவன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதவாளர் 60-வது வார்டு கவுன்சிலர் பாமா முருகன், அமைச்சர் ஏ.வ.வேலு ஆதரவாளர் முருகானந்தம் மருமகள் 79-வது வார்டு கவுன்சிலர் லக்‌ஷிகா ஸ்ரீ, உள்ளிட்டோரும் பாண்டிச்செல்வி, இந்திராகாந்தி, செல்வி, இந்திராணி உள்ளிட்ட பல கவுன்சிலர்களும் ரேசில் உள்ளனர். அதே போல் துணை மேயர் பதவிக்கு 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 84-வது வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா ,68- வது வார்டு கவுன்சிலர் மூவேந்திரன் ஆகியோரும் முயற்சித்து வருகின்றனர்.

 



மேயர் பதவியில் முக்குலத்தோர் அல்லாதவர் என்றால் துணை மேயர் பதவியிலாவது முக்குலத்தோர் இடம் பெற வேண்டும் என  பெரும் தலைகள் டீல் பேசிவருகின்றனர். மேயர் பதவியை தேர்வு செய்வதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சர் பி.மூர்த்திக்கும் குடைச்சல் ஏற்பட்டுள்ளாத கூறப்படுகிறது. வெளியூர் சென்று வந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது இஷ்ட தெய்வமான மதுரை மீனாட்சியம்மனிடம் தரிசனத்தையும் முடித்துள்ளார். இந்நிலையில் மதுரை மேயர் பதவியில் சிலர் ஜாதி அரசியலை கட்டமைக்க முயற்சித்துள்ளதாக உடன்பிறப்புகள் புகார் வாசித்து வருகின்றனர்.



மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக உள்ள ’அரசு’ பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியவர். தொடர்ந்து  அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் பார்வை இருந்துவரும் சூழலில், பல இடங்களுக்கு சென்று தனது (ப... பெட்டி) ஸ்வீட் பாக்ஸ் மூலம் வேலையை தக்கவைத்து வருகிறார். இந்நிலையில் பொறியாளர் அரசு  தனது கோடிக்காண சொத்துக்களை காப்பாற்றா கோடிகளை இறக்கவும் முடிவு செய்துள்ளதாக கார்பரேசன் வட்டாரங்கள் நம்மிடம் சத்தியமடிக்கின்றனர். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரன் சமூக நீதியை பின்பற்றி  நியாயமான நபரை மேயராக்க வேண்டும் என்று முயற்சிக்கும் சூழலில் நகர் பொறியாளர் ’அரசு’  தன்னை அரசாங்கம் என நினைத்துக் கொண்டு மேயரை ஸ்வீட் பாக்ஸ் மூலம் தேர்வு செய்துவிடலாம் என முயற்சிக்கிறாராம். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் தன்னுடைய சாதியினர்தான் மேயர் ஆகவேண்டும் என்பதால் தனது சாதிக்காரரை மேயராக்க எத்தனை கோடி கொடுக்க வேண்டும் என்றாலும் தயாராகி வருகிறாராம்.



அந்த எண்ணத்தில்  57-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள இந்திராணி பொன் வசந்தை எப்படியாவது மேயராக்க வேண்டும் என முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.  ஆரப்பாளையம் பகுதி செயலாளர் பொன்வசந்தின் மனைவி மேயராகிவிட்டால் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என  ’பொறியாளர் அரசு’ உறுதியாக நம்புகிறாராம். ஏற்கனவே பொன் வசந்த் மாநகராட்சியில் பல காண்ட்ராக்டுகளை கையில் எடுத்துள்ள சூழலில் அவரது மனைவியை மேயராக்க ’பொறியாளர் அரசு’ முழு முயற்சி எடுத்துவருகிறாராம். இதற்கு அமைச்சர் பி.டி.ஆர் வட்டாரத்தில் உள்ள ஏழுமலையானின் பெயர்கொண்ட நபரை ‘பொறியாளர் அரசு’ நாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த திட்டங்கள் அமைச்சர் பி.டி.ஆருக்கு தெரியாமல் தான் வலை பின்னப்படுகிறது. எனவே மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் பதவியில் மிக கவனமாக முடிவெடுத்து தலைமைக்கு யோசனை கொடுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.

 

பலரும் பல கணக்கு போட்டாலும், பல தகவல்கள் பரவினாலும் தலைமை எடுக்கும் முடிவைத்தான் அமைச்சர்கள் பின்பற்றுவார்கள் என அமைச்சர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.