போடி ரயிலை வேகமாக இயக்க ரயில் பாதையில் தடுப்பு வேலி அமைப்பு. இந்த பகுதியில் ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன எனவும் எச்சரிக்கை.
மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதை
மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையில் ரயில்களை வேகமாக இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ரயில் பாதையில் சில இடங்களில் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகனங்கள் கடக்கின்றன. இதனால் அந்த இடங்களில் 30 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை மெதுவாக இயக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ரயில்களை வேகமாக இயக்க முடியாமல் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.
ரயில்கள் வழக்கமான வேகமான 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மதுரை காமராஜர் பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியான முத்துப்பட்டி அருகே ரயில் பாதையை அனுமதி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் கடந்து வந்தன. இதனால் அந்த இடத்தில் ரயில்கள் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக சென்று வந்தன. தற்போது அந்த இடத்திலும் ரயில்கள் வழக்கமான வேகமான 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
இதற்காக ரயில் பாதை இருபுறமும் 130 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் பலகை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அனுமதி இல்லாத இடங்களில் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.