'பெட்ரோல், டீசல் விலை ஒரு பக்கம் உச்சத்தை தொட நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சிறிய அளவு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய வகையில் பேட்டரி ஜீப் ஒன்றை தயாரித்துள்ளார்  கீழடியைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்ஜினியர் பட்டதாரி ஒருவர். 



 

கீழடி என்ற ஒற்றைச் சொல் உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது. தமிழர் பழங்காலம் முதல் வாழ்ந்ததற்கான சான்றே கீழடி. இந்நிலையில் கீழடியைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் பட்டதாரி கெளதமன் விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் பேட்டரி ஜீப் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். இதன் மூலம் குறைந்த பணத்தில் விவசாயிகள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான ஒன்றாகவும் அமையும் என கெளதம் தெரிவிக்கிறார்.



தொடர்ந்து கெளதமன் பேசுகையில்,  “அப்பா, அம்மா கூலி வேலை செஞ்சாலும் என்ன இஞ்ஜினியரிங் படிக்க வச்சுட்டாங்க. ஆனாலும் எனக்கு சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து பணி செய்யவேண்டும் என்பதே என் கனவு. அதனால் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தேன். உயரம் பற்றாக்குறை காரணமாக உடல் தகுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை. இந்நிலையில் படித்து முடித்த பின் கொரோனா காலகட்டத்தில் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். இந்த சமயத்தில் எங்கள் பகுதி விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், கால்நாடைகளுக்கு தீவனங்கள் எடுத்துச் செல்லவும் சிரமப்பட்டதை உணர்ந்தேன்.



பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அவர்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க பேட்டரி மூலம் இயங்கும் ஜீப் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் போதிய பணம் இல்லை.  இதனால் தொடர்ந்து கம்பி கட்டும் வேலைக்கு  சென்று சிறிய அளவு பணம் சேர்த்தேன். மேலும் எங்க அப்பா, சித்தப்பா என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு பணம் ரெடி செய்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஜீப் உதிரி பாகங்களை சேகரித்து பேட்டரியில் இயங்கும் வாகனத்தை தயார் செய்துள்ளேன். அதற்கான பேட்டரிகள் மட்டும் அருகில் உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வாகனத்தை பயன்படுத்துகிறேன்.



தற்போது பயன்படுத்தும் நார்மல்பேட்டரி 8 மணி நேரம் ஜார்ஜ் செய்தால் 40- 80 கிலோ மீட்டர் வரை செல்ல முடிகிறது. அதுவே லித்தியம் வகை பேட்டரியை பயன்படுத்தினால் ஜார்ஜ் ஏறும் நேரத்தை குறைத்து 260கி.மீ  முதல் 280 கி.மீட்டர் வரை வாகனத்தை இயக்கலாம். எனவே விவசாயிகளுக்கு மிகப்பெரும் பயணாக இந்த வாகனம் இருக்கும். அரசும், தனியார் நிறுவங்களுக்கும் இந்த பேட்டரி ஜீப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல  உதவ வேண்டும்" என்றார்.