உலக அளவில் வாழை ஏற்றுமதிக்கு என்று ஒரு பெரிய சந்தை உள்ளது எனலாம். சர்வதேச அளவில் 97.5 லட்சம் மில்லியன் டன் வாழை ஆண்டு தோறும் உற்பத்தியாகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 16.91 லட்சம் மில்லியன் டன் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்கள்  ஏறக்குறைய 90 சதவீதம் உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதியாகிறது. குறைந்த அளவிலான வாழைப் பழங்கள் ஏற்றுமதி ஆனாலும் அதற்குப் போதிய விலை கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள். இருந்தபோதிலும் இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான பழங்கள் உள்நாட்டிலேயே  அதன் சந்தை உள்ளதால், வாழைப் பழங்களுக்கு நிலையான  விலை கிடைக்காமல்  இருப்பதால், வாழைப்பழங்களுக்கான விலை  கிடைக்காத சமயங்களில் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.



இதே போன்ற நிலைமையைதான் தேனி மாவட்டம் கம்பம் பகுதி வாழை விவசாயிகளும்  சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக,  ஆண்டுதோறும் கட்டுபடியான விலை கிடைக்க வாழைப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள்கள் குறிப்பாக ஜாம். ஜெல்லி, பவுடர், பானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத் தாக்கில் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறிவருகின்றனர்.



இதுகுறித்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு வாழை விவசாயிகள் கூறுகையில், "தேனி மாவட்டம் ஒரு விவசாய பகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு நெல் திராட்சை, வாழை, மா, தென்னை,  கரும்பு ஆகியவைகளின் விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் பெருமளவில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி சுமார் 4 ஆயிரம் எக்டேரில் பயிரிட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது செவ்வாழை,  நேந்த்ரம்,  நாழிப்பூவன்,  ஜி 9 என பல ரகங்கள் சாகுபடியாகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் வாழைப்பழத்திற்கு அதிக சுவை இருக்கும் என்பதால், வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.



ஆனாலும் இப்பகுதி வாழைப்பழத்திற்கான விலை நிலையாக இல்லாமல் குறைவதும், அதிகரிப்பதும் மாறிமாறி நடக்கும். இருந்தபோதிலும் உற்பத்திக்கான செலவுகள் குறையாது. மாறாக உரம், பூச்சி மருந்துகள், தொழிலாளர் கூலி உயர்ந்து கொண்டே போகிறது. தொடர்மழை,  பலமான காற்று ஆகிய  இயற்கை சீற்றங்களால் வாழைகள் சேதம் ஏற்படுவதும் தொடர்கிறது.



இந்நிலையில் வாழைப் பழங்களுக்கு நிலையான விலையை ஏற்படுத்த,  வாழைப் பழத்தை பயன்படுத்தி மதிப்புக்கூட்டிய உணவுப் பொருள்களான ஜூஸ், ஜெல்லி, ஜாம், பவுடர், ஆகிய பொருள்களை   தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்" என இப்பகுதி வாழை  சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 


https://bit.ly/2TMX27X