உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மதுரை தெப்பக்குளத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “உலகளவில் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. உலகளவில் சுமார் 52 சதவீதம் விவசாய நிலம் வளம் இழந்துவிட்டதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம சத்து இருந்தால் தான் அதை மண் என்றே அழைக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் 63 சதவீத விவசாய நிலங்களில் கரிம சத்தின் அளவு 0.5 -க்கும் குறைவாக உள்ளது. 


 

 

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், உணவு பற்றாகுறை, தண்ணீர் பஞ்சம், உள்நாட்டு கலவரம் என பல அபாயகரமான பிரச்சகனைகள் ஏற்படும். இதை தடுக்கவும், மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு அவர்கள் மண் காப்போம் இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார்.  இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் விளைவாக, 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.



 

அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்காக செயல் செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்” என்றனர். மதுரை மட்டுமின்றி, சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், ராஜபாளையம், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக மண் தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட  இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்