மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்ட காளையால் இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் நடைபெற உள்ளது. இன்றைய தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடம்ன் தொடங்கும் இந்த ஜல்லிக்கட்டில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு கார் தொடங்கி தங்கம், வெள்ளி, சைக்கிள், கட்டில் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் முறைகேடுகள், குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் இம்முறை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல் மாடுகளின் உடலில் எண்ணெய், இரசாயனப் பவுடர்கள் தேய்க்கப்பட்டுள்ளனவா என்பதை பரிசோதித்த பிறகே போட்டியில் களமிறக்கப்படும். மேலும் இந்தாண்டு முதல் போட்டி முடிந்து வெளியே வரும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
காயமடையும் வீரர்களுக்கு அவசர சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ மையத்தில் 10 மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடை துறையினரும் தயார் நிலையில் உள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய பிரதிநிதிகளைஉ உள்ளடக்கிய ஆலோசனி குழுவின் மேற்பார்வையில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டி போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதி முழுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞர்
இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தனது காளையை அழைத்துக் கொண்டு ஆறுமுகம் என்ற இளைஞர் வந்துள்ளார். அவர் தனது காளையை வாகனத்தில் இருந்து இறக்கும் போது எதிர்பாராதவிதமாக காளை ஆறுமுகத்தை முட்டித்தள்ளியது. மேலும் காளையின் கொம்பு இளைஞரின் அடிவயிற்றுப் பகுதியில் பலமாக குத்தியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி பெற்றார். அவருக்கு அடிவயிற்றில் 3 தையல்கள் போடப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.