திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் நத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் கடத்தி வரப்பட்ட 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 7 பேர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த குணசேகரன், அழகு, அம்சுபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.




பின்னர் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கஞ்சா வியாபாரிகளான 3 பேரின் சொத்துகளை முடக்கும்படி தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 3 பேருடைய சொத்துகளின் விவரங்களை சேகரித்து, அவற்றை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.




அதன்படி, குணசேகரன், அம்சுபாண்டி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருந்த வீடு, நிலம், வீட்டுமனை என மொத்தம் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




அதேபோல தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரை கஞ்சா கடத்திய வழக்கில் தேனி போதைப்பொருள் போலீசார் சமீபத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அவருடைய சொத்துக்களை முடக்க கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.




இதையடுத்து தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி மலைச்சாமியின் சொத்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து அவருக்கு சொந்தமான சுமார் 15 செண்ட் நிலம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.13 ஆயிரத்து 952 இருந்தது. அந்த வங்கிக் கணக்கு மற்றும் நிலம் ஆகிய சொத்துக்கள் முடக்கப்பட்டன.