தேனி மாவட்டம் கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருப்பதால், அதை இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பார்வையிட்டு செயல் அலுவலரிடம் கோவில் சம்பந்தமான பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசுகையில், “கம்பம் கம்பராய பெருமாள், காசி விசுவநாதர் ஆலயம் மற்றும் இந்துக் கோயில்களில் உள்ள சொத்துக்கள் தனியாரின் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளதாகவும், கோயிலில் வரும் வருவாயை கோயிலுக்கான திருப்பணிகள் செய்யாமல் அதை விடுத்து இங்கே கோயில் வருவாய் முழுக்க அறநிலையத்துறையுடைய கணக்கிலே சென்று விடுகிறது. செய்யக்கூடிய திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாகத்தான் திருப்பணியில் செய்யப்படுகிறது. உபயதாரர்கள் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயிலில் பணிகள் செய்ய வேண்டும் என்றால் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் சர்ச்சுகள் மசூதிகளில் பழமை வாய்ந்தவைகளை புதுப்பிப்பதற்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்குகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். இந்தக் கோயில்களில் திருப்பணியானது அரசு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை இந்து அறநிலையத்துறை அமைச்சரிடத்திலும் முதல்வர் இடத்திலும் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார். மேலும், ”இப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் மக்களை அனுமதிக்கின்றனர். அந்த நிலைமை மாறி மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கண்ணகி கோவிலில் வழிபாடு செய்திட வகையிலே அந்த கோவிலுக்கு நம்முடைய வழிபாட்டுரிமை மீட்டுக் கொடுக்க வேண்டும். இது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை .
நாடாளுமன்றத்திலே முதல் முதலாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு ராகுல் அவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்துக்கள் என்பவர்கள் பிஜேபியை சார்ந்தவர்கள், இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவர்கள், இந்துக்கள் அல்ல என்று ராகுல் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் மற்றும் இந்திய கூட்டணியில் இருந்து கொண்டு எழுதிக் கொடுத்ததை ராகுல் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்துக்கள் சமூக வலைதளங்களில் எந்த பதிவு போட்டாலும் திராவிட மாடல் அரசு பொய் வழக்கு போட்டு இந்துக்களை சிறையில் அடைகின்றனர். இதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்து அறநிலை துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். இதனால் அவர்களை மாற்றி இந்துக் கோயில்கள் அனைத்தையும் அறங்காவலரிடம் ஒப்படைத்து அவர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.