கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கோகுல்ராஜ் தாயார் சித்ரா மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகன் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 10 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியது. அதேசமயம் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.  இதே போல  ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,  ஹேமலதா அமர்வு, விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.




மற்றொரு வழக்கு


இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தெருவிளக்கு மின் கம்பம் விழுந்ததில்  இறந்த கணவரது மரணத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க கோரிய வழக்கில், மனுதாரரின் வருமானத்தை கணக்கில் கொண்டு   10,71,000 ரூபாயை, 11.10.2010 முதல்  வருடத்திற்கு 6% வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த செல்லம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2010 செப்டம்பர் 19ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் எனது கணவர் சென்று கொண்டிருக்கும் பொழுது தெருவிளக்கு மின் கம்பம் விழுந்ததில் எனது கணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தோம். பின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். தனியார் மருத்துவமனையில் 2 லட்சம் வரை செலவு செய்தோம். இருந்தும் எனது கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, எனது கணவரின் மரணத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு மின் வாரியம் தரப்பில், "தெருவிளக்கு மின்கம்பங்களை பராமரிப்பது மதுரை மாநகராட்சி. எனவே இந்த சம்பவத்திற்கு மதுரை மாநகராட்சியே பொறுப்பு" என தெரிவிக்கப்பட்டது.


மதுரை மாநகராட்சி தரப்பில், மின்கம்பங்களை தமிழ்நாடு மின்வாரியமே பராமரிக்க வேண்டும். இந்த விபத்திற்கு மின்சார வாரியமே பொறுப்பு" என பதில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிபதி, "தெருவிளக்கு மின்கம்பங்களை பராமரிப்பது, மின்கம்பிகள் மாற்றுவது இவை அனைத்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பு. எனவே, மனுதாரரின் வருமானத்தை கணக்கில் கொண்டு அவருக்கு மொத்தமாக 10,71,000-யை 11.10.2010 முதல் தற்போது வரை வருடத்திற்கு 6% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.