அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவத்தில், மூன்று நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மரணம் அடைந்தார். அவர் உடல் விமான மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது  அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தொண்டர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வெளியே நின்றனர். வீரருக்கு மரியாதை செலுத்தி விட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில்  வந்த போது பாஜக தொண்டர்கள் அமைச்சர் காரின் மீது காலணி வீசினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய மூவரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என மூன்று பேரும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மூன்று நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும். என நிபந்தனை விதித்து மூன்று நபர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


 




மற்றொரு வழக்கு


நெல்லை கோவிலம்மாள்புரத்தில் பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரிய மனுவை  நிராகரித்த நெல்லை ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


நெல்லையை சேர்ந்த சுவாமிதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரிய மனுவை  நெல்லை ஆட்சியர் நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், " மனுதாரர் கூறும் இடத்தில் செல்லையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் 1977 முதல் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிறு மற்றும் விழா நாட்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படாமல் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது.  இந்நிலையில் உறுப்பினர்கள் அதிகமானதால் நெல்லை டயசிஸ் தரப்பில், 21 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அதில் பிரார்த்தனை கூடம் கட்ட திட்டமிடப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் இதற்கான அனுமதியை வழங்கவில்லை.


மனுதாரர் தரப்பில், " மதக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்களில் சிலரே கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும், திட்ட அனுமதி உள்ளிட்ட அனுமதிகளை பஞ்சாயத்திடம் இருந்து முறையாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அரசு தரப்பில், “மனுதாரர் குறிப்பிடும் கோவிலம்மாள்புரம் கிராமம் ஒரு குக்கிராமம். இங்கு 180 இந்து குடும்பங்களும், 10 கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன. பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் 75 மீட்டர் தொலைவிலும் இரண்டு கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கினால் சட்ட - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பாக அமையும். இதன் காரணமாகவே மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது. ஆகவே மனுதாரர் கூறும் நிவாரணத்தை வழங்க இயலாது எனக் கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.