தமிழகம் முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதேபோல் ராமநாதபுரத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ராமநாதபுரம் பத்திரபதிவு  அலுவலகத்தின் கதவை மூடி யாரும் வெளியே செல்ல முடியாதபடி தடுத்தனர். பின்னர் அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக சோதனை நடத்த தொடங்கினர். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சார் பதிவாளர், ஊழியர்களின் மேஜைகளில் பணம் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது. மேலும், அலுவலக வளாகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனத்துக்கும் அந்தந்த ஊழியர்களை தனித்தனியாக அழைத்து வந்து சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர சார் பதிவாளர் அலுவலகத்தில் நின்றிருந்த ஓய்வுபெற்ற அலுவலர், பத்திர எழுத்தர்கள் ஒவ்வொருவரிடமும் சோதனை நடத்தினர்.




ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இடைத்தரகர்கள் அதிகமாக நடமாடுவதாகவும், பத்திர பதிவு உள்ளிட்ட வேலைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து, அலுவலக கதவை பூட்டினர். பின்னர் அவர்கள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அலுவலத்திற்குள் இருந்த ஒரு புரோக்கர் சிக்கினார்.


மேலும், உள்ளே இருந்த பொது மக்களை விசாரித்து அனுப்பி வைத்தனர். இந்த சோதனையில் பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தனர். பின்னர் சார்பதிவாளர் இளங்கோவன் மற்றும் அலுவலக உதவியாளர் அன்புராஜ் ஆகியோரது மேஜைகளில்  சோதனை நடத்தப்பட்டது. இதில் சார்பதிவாளர் இளங்கோவனிடம் 50 ஆயிரம், அலுவலக உதவியாளரிடம் ரூபாய் 3 ஆயிரம் மற்றும் நில புரோக்கர் பாலசுப்பிரமணியனிடம் ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரம் என மொத்தமாக 5 லட்சத்து 23 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.


இதில் நில புரோக்கரிடம் இருந்த ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கு  கணக்கு காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய ரூபாய் 53 ஆயிரத்திற்கு கணக்கு கேட்டு சார் பதிவாளர்  இளங்கோ, அலுவலக உதவியாளர் அன்பு ராஜ் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையின் முடிவில் ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 70 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம்  பத்திர பதிவுக்கு கூடுதலாக பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் பத்திர பதிவு  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.