தீவிரமாக பரவி வரும் கொரோனா ஒருபுறம், அதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மறுபுறம், அதே நாளில் தமிழர்களின் பாராம்பரிய ஜல்லிக்கட்டு வருவது மறுபுறம் என நாளா புறமும் சுழன்று கொண்டிருக்கிறது பார்வைகள். எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய முடியாது என்பதால், அதை கட்டாயம் நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. அதன் காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி, திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும், அதே நேரத்தில் 150 நபர்களை வைத்து ஜல்லிக்கட்டு நடைபெறும், 300 காளைகளுக்கு மட்டுமே அனுமதி, இணையதள பதிவு என்றெல்லாம் புதிய விதிமுறைகளை அரசு தரப்பில் அறிவித்துள்ளனர். ஜனவரி 14 ல் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஜனவரி 15 ல் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.




ஆனால் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தான் தற்போது பிரச்சனை பிறந்துள்ளது. ஜனவரி 16 ல் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ஞாயிற்று கிழமை வருகிறது. ஆனால் கட்டுப்பாடுகளின் படி போட்டியை நடத்துவோம் என்கிற மாவட்ட நிர்வாகம். நல்ல விசயம் தான். ஆனால் இதில் சில அடிப்படை கேள்விகள் எழுகிறது. அதற்கு அரசோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.


பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்பது வரை ஓகே. அதை நடைமுறைப்படுத்தவும் முடியும். ஆனால், வெளியூரிலிருந்து வரும் காளைகள், வெளியூரிலிருந்து வரும் மாடுபிடி வீரர்களின் நிலை என்ன? முதல்நாள் சனிக்கிழமை இரவிலிருந்தே ஊரடங்கு அமலுக்கு வந்துவிடும். அப்படி இருக்கும் போது அவர்களால் எப்படி போட்டியில் பங்கேற்க முடியும். அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், அது தான் திட்டம்என்கிறார்கள் அதிகாரிகள். 


ஜல்லிக்கட்டு ஏற்பாடு குழுவில் உள்ள அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, ‛‛இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதே அதற்காக தான். மாடுகள் விபரத்தை இணையத்தில் பதிவு செய்யும் போது, குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க முடியும். இதனால், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தவிர்க்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி திட்டமிட்டபடி செயல்படுத்தவும் முடியும்,’’ என்றார் .




அதிகாரி கூறியதை வைத்து பார்க்கும் போது, ‛மதுரை மாவட்டத்தின் அதிலும் குறிப்பிட்ட ஒரு சரகத்தை சேர்ந்த காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மாடுபிடி வீரர்களுக்கும் கிட்டத்தட்ட அதே நிலை தான், அப்படி பார்க்கும் போது, உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இம்முறை உள்ளூர் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டாக மட்டுமே நடைபெறும். அதன் பின்னணியில் கட்டுப்பாடுகள் இருக்கும்.


இதை கடந்து, போட்டி நடைபெறும் அலங்காகநல்லூரில் ஞாயிறு ஊரடங்கு எவ்வாறு பின்பற்றப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது. பொதுமக்களை, பார்வையாளர்களை அனுமதிக்க மாட்டோம் என்கிறது அரசு. போட்டி நடைபெறும் பகுதியே குடியிருப்புகள் சூழ்ந்த பகுதி. வாடிவாசலை தவிர அனைத்தும் குடியிருப்புகளே. அப்படியிருக்கும் போது, அங்குள்ள மக்களின் நடமாட்டாத்தை தவிர்க்க முடியாது. ஒன்று வேண்டுமானால் செய்யலாம், முழு ஊரடங்கில் இருந்து அலங்காநல்லூருக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கலாம். அப்படி வழங்கினால் மட்டுமே அது முழுமையான ஊரடங்காக இருக்கும். இல்லையேல், அது ஊரே அடங்காத ஊரடங்காக மட்டுமே இருக்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண