தேனி மாவட்டம் ஆர்.எம்.டி‌.சி காலணியில் வசிக்கும் சதீஷ்குமார் (42) தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜப்பிரியா என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா உடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சதீஷ்குமார் பலமுறை கண்டித்தும், கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.  மேலும் தனது பெண் மற்றும் ஆண் குழந்தை என இருவரை சதீஷ்குமார் குச்சனூரில் உள்ள தனது பெற்றோர் பராமரிப்பில் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் ராஜப்பிரியா செல்போனில் சாட் செய்து கொண்டிருந்ததால், இது தொடர்பாக ராஜப்பிரியாவிற்கும் சதீஷ்குமாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குச்சனூரில் உள்ள தனது தந்தை துரைசிங்கத்திடம்  போன் மூலம் தகவல் கூறியுள்ளார். உடனடியாக துரைசிங்கம் தனது மனைவி முனியம்மாளுடன் நள்ளிரவு நேரத்தில் ஆர்.எம்.டி.சி. காலனிக்கு வந்தார். அப்போது தொடர்ந்து பிரச்சினை எழுந்ததால் ராஜப்பிரியாவை அவரது சித்தி பரமேஸ்வரியை வரவழைத்து அவருடன் அனுப்பியுள்ளனர்.

மேலும் சதீஷ்குமார் அவரது அப்பா துரைசிங்கம், அம்மா முனியம்மாள் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருந்தனர். பின்னர் நேற்று மாலை தனது கணவர் சதீஷ்குமார் வீட்டில் தனது பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்காக ராஜப்பிரியா மீண்டும் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமனார் துரைசிங்கத்திற்கும் ராஜப்பிரியாவிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது என் மகனின் வாழ்க்கையை நீ கெடுத்து விட்டாய் என்று கூறி ஆத்திரத்தில், சூரிக்கத்தியால் ராஜ பிரியாவின் உடலில் பல்வேறு பாகங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.மருமகளை குத்திக் கொலை செய்த துரைசிங்கம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஆஜரானார்.நேற்று இரவு குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தவில்லை. இன்று காலை முதல் தேனி டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது