அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 66. 1954 செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் பிறந்தவர். கடந்த 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வத்திற்கும்  விஜயலட்சுமிக்கும் 14.11.1977 அன்று திருமணம் நடைபெற்றது.




இவர்களுக்கு கவிதா பாணு என்ற மகளும்,  தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் என்ற 2 மகன்கள் உள்ளனர். காலமான விஜயலட்சுமி, ஓ பன்னீர் செல்வத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவராக இருந்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 10 நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரடைப்பால்  உயிரிழந்தார்.



ஓபிஎஸ்  மனைவியின் மறைவு ஓபிஎஸ் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்யின் தம்பி பாலமுருகன் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் மனைவி இறந்த சம்பவம்  ஓபிஎஸ் குடும்பத்தார்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



விஜயலட்சுமியின் உடலானது தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு  இன்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னேற்பாடுகளை அவரது குடும்பத்தார்கள் செய்து வருகின்றனர். மேலும் அவரது உடல் நல்லடக்கம் நாளை காலை 11 மணி அளவில் பெரியகுளம் உள்ள மயானக் கரையில் அடக்கம் செய்ய உள்ளதாக உறவினர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


https://bit.ly/2TMX27X