எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் மதுரை வளையங்குளம் பகுதியில் அதிமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக தொண்டர்கள் இன்று முதலே மதுரை வர துவங்கிவிட்டனர். தென் மாவட்டங்களில் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு மிகப்பெரும் எதிர்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த மாநாட்டை எடப்பாடி பழனிசாமி முக்கியமான மாநாடாக கருதி மாநாட்டு பணிகளை கூட நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்.



இந்நிலையில் இன்று மாலையே மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி தனியார் ஹோட்டலில் தங்குகிறார். நாளை காலை முதலே மாநாடு நிகழ்வு துவங்கி இரவு வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்  இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் இருப்பதற்காக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகில் உள்ள 'ரிங்' ரோட்டில் சுற்று வட்டார பகுதியை தாண்டி வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 




 

இதன்படி, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் திருமங்கலம், வாடிப்பட்டி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர், திண்டுக்கல் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 


 

மதுரைக்கு வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் தேவர் கூட்டமைப்பினர்  ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின கூட்டமைப்பினர் சார்பில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.