தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்திய பின்பு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை புள்ளி விவரத்துடன் பத்திர பதிவுத்துறை தலைவர் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருகின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பிடையும் ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே, முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் முறைகேடாக பத்திர பதிவு செய்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை இந்த நீதிமன்றம் ஏற்காது.

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்திய பின்பு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை புள்ளி விவரத்துடன் பத்திர பதிவுத்துறை தலைவர் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

 



மற்றொரு வழக்கு


தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் உண்மைத் தன்மையை மறைத்து புதிய வழக்கு தொடுத்தது ஏன் நீதிபதிகள் கேள்வி இதுபோன்று செய்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் கவிதா உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் புளியங்குடி நகராட்சி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு கவுன்சிலராக உள்ளேன். எங்கள் நகராட்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விஜயா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜயா பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்  இவர் போலியாக தாழ்த்தப்பட்ட சமூக ஜாதி சான்று பெற்று உள்ளார் என ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது அதேபோல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திலும் புகார் நிலுவையில் உள்ளது இந்நிலையில் இவர் நகராட்சி நிதிகளை முறைகேடாக தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார் எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

 

இந்த மனு மகாதேவன் சத்திய நாராயண பிரசாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் பல்வேறு உண்மைகளை மறைத்து பொதுநல வழக்காக தாக்கல் செய்து உள்ளார் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது பொய்யான வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு அபராதம் மிதிக்க வேண்டும் என வேண்டிக் கொள் வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞரை  விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கை மறைத்து புதிய வழக்கு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர் தாங்களே இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் நல்லது இல்லை என்றால் நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.