திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சிறப்பு குழு அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கனிம வளங்களை பாதுகாப்பது கனிமவளத்துறை அதிகாரிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் பால்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு கனிம வளங்கள் கடத்தலை தடுப்பதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன இந்த நிலையில் மணல் மற்றும் சரளை கற்களை சிறு கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Continues below advertisement

இவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுற்றுச்சூழல் கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, திண்டுக்கல் மாவட்டம் வடக்கு, தெற்கு, நிலக்கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர் வருவாய் மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக, சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுக்கப்படுகின்றன. JCB, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் 10 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கனிமவளங்கள் மற்றும்  மண் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக புகார்களின் பெயரில் ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நியமித்தார். அதன்படி, நிலக்கோட்டை தாசில்தார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் ஆய்வு செய்ததில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சிறப்பு குழு ஆத்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதேபோல் திண்டுக்கல் மேற்கு தாலுகா பகுதியில் ஆய்வு செய்ததிலும் சட்டவிரோத நடவடிக்கை உறுதியாகியுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் முறையான உரிமம் கூட பெறாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உறுதியாக உள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து சிறப்பு குழுக்கள் தங்களது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக வேடசந்தூர் தாலுகாவில் சட்டவிரோத சரலை கற்கள் குவாரிகள் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. ஆகவே திண்டுக்கல் கிழக்கு, நிலக்கோட்டை, ஆத்தூர் வருவாய் மண்டல பகுதிகளில் தாலுகா அளவிலான சிறப்பு குழுக்களால் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி. புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வருவாய் துறை அதிகாரிகளே அதற்கான பொறுப்புடையவர்கள். ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.