திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் வருகை புரிந்தனர். கொடைக்கானல் ரைபிள் ரேஞ் பகுதியில் உள்ள பணிகள் முடிந்த குடிநீர் வடிகால் வாரியம் நீர் தேக்க தொட்டி மற்றும் அப்சர்வெட்டரி பகுதியில் உள்ள குண்டார் குடிநீர் திட்டம் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையும், உறுப்பி னர்களாக காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், திருத்துறை சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் இதில்
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளக்கெவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் இடம் வனத்துறை தங்களுக்கு சொந்தம் என்று தடை விதிக்கிறது. ஆனால் இந்த இடத்திற்கு சொந்தம் என்று சொல்வதற்கு வனத்துறையினரிடம் ஆதாரம் இல்லை என்றும் தற்போது அமைத்து வரும் சாலை அளவீடு பணிகள் நடைபெற்று முடிந்ததில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என உறுதி படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை இடையூறு செய்யாமல் 15 நாட்களுக்குள் வனத்துறையினர், வருவாய் துறையினருடன் இணைந்து சாலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். மீண்டும் இடையூறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொடைக்கானலில் மாஸ்டர் பிளானுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை படுத்தி ஆணை வழங்கவேண்டும் அதற்கு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் வரைமுறை படுத்துவதற்கு ஒரு கமிட்டி அமைக்க பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சாலையோர சைக்கிள் கடை தற்போது அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் சுற்றுலா பயணிகள் சைக்கிள் இயக்குவதற்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் கொடைக்கானலில் ஆண், பெண் இருபாலரும் படிக்க கல்லூரி அமைவதற்கு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.