பழனி அருகே பாலாறு அணையில் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது உடலில் இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டிக்கொண்டு நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  படிப்பில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

​​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருந்தலாறு அணைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு துஷ்யந்த் (17) என்ற மகன் இருந்தார். இவர் நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு (Bio-Maths) படித்து வந்தார். ​இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த மாணவர் துஷ்யந்த், தனது நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

Continues below advertisement

ஆனால், இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், துஷ்யந்தை பல்வேறு இடங்களில்  தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை பழனி அருகே உள்ள பாலாறு அணைப் பகுதியில் துஷ்யந்த் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது உடலில் இரும்புச் சங்கிலியால் கனமான கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்துள்ளார்.​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து உடனடியாக இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா காவல் துறையினர், மாணவர் துஷ்யந்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்னிரண்டாம் வகுப்பு பயோ-மேக்ஸ் பிரிவில் படித்து வந்த துஷ்யந்துக்குக் பாடங்கள் கடினமாக இருந்ததாகவும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான துஷ்யந்த், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தனது நண்பர்களிடம் ஏற்கனவே கூறி வந்துள்ளார். மேலும், அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், நீரில் குதித்தால் தானாக நீந்தி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுத் தன் உடலில் இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டிக் கொண்டு அணையில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்துப் பழனி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)