மதுரை மாவட்டம் மேலூர் தும்பைபட்டி அருகேயுள்ள செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா, பனங்காடி பகுதியை சேர்ந்த கருப்பையா, சாளக்கிபட்டி பகுதியை சேர்ந்த பாண்டி, அலங்கம்பட்டியை சேர்ந்த சரவணன் ஆகிய 4பேரையும் ஓமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் துப்புரவு பணி மற்றும் கண்ணாடி கட்டர் ஆப்ரேட்டர் பணி இருப்பதாவுகவும், மாதம்தோறும் 60 ஆயிரம் முதல் 70ஆயிரம் வரை சம்பளம் என கூறி மேலூர் அருகேயுள்ள சருகுவலையப்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் மூலமாக ஓமன் நாட்டிற்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்றுள்ளனர்.



இந்நிலையில் ஓமன் நாட்டிற்கு சென்ற சில நாட்களில் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வீட்டில் உள்ள கழிவறை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளனர். அதற்கான ஊதியமும் வழங்காத நிலையில் தற்போது மேலூரில் இருந்த சென்ற நால்வர் மற்றும் சிவகங்கை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் பகுதிகளை சேர்ந்த 11 பேர் என 15பேரையும் அடைத்துவைத்து கொத்தடிமை போல நடத்துதாகவும் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து தனது மகனை மீட்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பையாவின் தந்தை  இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முகவரிடம் கேட்டபோது என்னால் எதுவும் செய்ய இயலாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும், எனவே மாவட்ட எனது மகனை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



 

இதுபோன்ற மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மற்ற 3பேரின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் இருந்து ஓமனுக்கு பணிக்கு சென்ற 15 தமிழர்களும் தங்களை அரசு மீட்டுத்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது