அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அடுத்தப்படியாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பிரபலமானது. இந்நிலையில் அவனியாபுரம் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டுச் சென்றனர். மதுரை அவனியாபுரத்தில் மாட்டுவண்டி சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் செல்லும் பிரதான சாலையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் பங்கு பெற்றது. பெரிய மாட்டு வண்டிகளுக்கான பிரிவில் 8 மாட்டு வண்டிகளும் மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பிரிவில் 7 மாட்டுவண்டிகளும் இந்த போட்டியில் கலந்து கொண்டன.




அவனியாபுரம் முதல் நிலையூர் வரை சென்று திரும்பும் பெரிய மாட்டு வண்டிகளுக்கு மொத்தம் 9 கிலோமீட்டர் தூரமும்., அவனியாபுரம் முதல் திருப்பரங்குன்றம் வரை சென்று திரும்பும் சிறிய மாட்டு வண்டிகளுக்கு மொத்தம் 7  கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது.  எல்லையை தொட்டு வரும் பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம், 2-வது பரிசாக 50 ஆயிரம், 3-வது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும்., ஆறுதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 30 ஆயிரம், 3வது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் ஆறுதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.




பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் திருவாதவூர் K.L.அம்பாள் மாடு முதல் பரிசு ரூபாய் 60 ஆயிரம்., 2வது பரிசாக பாண்டி கோவில் பாண்டிசாமி மாடு 50 ஆயிரம் பெற்றது., அதேபோல் 3-வது பரிசு அவனியாபுரம் நகை கடை முருகன் மாடு 40 ஆயிரம் பரிசு பெற்றது. ஆறுதல் பரிசு ஆட்டுக்குளம் காந்தி என்பவருக்கும் வழங்கப்பட்டது.




சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் முதல் பரிசாக ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன் 40 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக தேனி K.K.பட்டி கணேஷ் 30 ஆயிரம் ரூபாயும் 3-வது பரிசாக தேவகோட்டை லெஷ்மணன் 20 ஆயிரம் ரூபாயும்., ஆறுதல் பரிசாக உத்தமபாளையம் மணி முருகன் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு  ரேக்ளா ரேஸ் சங்க மாவட்ட தலைவர் மேலமடை சீமான் ராஜா தலைமையில்  அவனியாபுரம் மாரி 92-வது மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் விழாவில்  கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண