மதுரை மாவட்டம் யா.ஒத்தகடை செல்லும் பகுதியில் உள்ளது உத்தங்குடி. இங்கு மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குக் கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் திருவிழா  நடைபெற்றது.


 





பள்ளிக்கு தேவையான பீரோ, இருக்கை, மேஜை, புத்தகங்கள், நோட்டுகள், சமையல் செய்ய தேவைப்படும் பாத்திரங்கள், குடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் இணைந்து மேளதாளம் முழங்க கல்விச்சீரினை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் "தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி" பாடல் ஒலிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சீருடன் வந்த பொதுமக்களை மலர்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.



 

இது குறித்து சீர் வரிசை கொண்டுவந்த பொதுமக்கள் கூறுகையில்..,” மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் எங்கள் பகுதி மாணவர்கள் அதிகளவு படித்து வருகின்றனர். இதனால் பள்ளியின் மேம்பாடு அவசியமான ஒன்று. அதற்காக பலரும் சேர்ந்து இந்த சீர் வரிசையினை வழங்கினோம். எங்கள் வார்டு கவுன்சிலர் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து பல்வேறு பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு பொருளும் மாணவர்களுக்கு பயன்பெறும் என்பது மகிழ்ச்சி" என தெரிவித்தனர்.