வனப்பகுதியை ஒட்டி உள்ள விலை நிலங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைக்கும் பொழுது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வன பாதுகாவலர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தல் அளித்துள்ளது.
வனப்பகுதியில் தீ:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முருகமலை வனப்பகுதியில், பாம்பார் காப்புக்காடு, தொண்டகத்தி உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர் 2 நாட்களாக போராடி வனப்பகுதியில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தி முற்றிலும் அனைத்தனர்.
வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் கைது:
இந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, முத்துச்சாமி ஆகிய இருவரும் தொண்டகத்தி பகுதியில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் விவசாய கழிவுகளுக்கு தீ வைத்த போது அருகே இருந்த வனப்பகுதியில் தீ பற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.
வனத்துறையினர் அறிவுறுத்தல்:
இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரால் விவசாயிகள் இருவர் மீதும் 1882 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கழிவு பொருட்களை, தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
வனத்துறையினரின் எச்சரிக்கை:
இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் சமூகவிரோதிகள் தீ வைத்து விட்டு தப்பிச் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தீ வைத்த நபர்களை இதோடு இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் வலியுறுத்தி வருகிறார்.