சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் பகுதியில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ள போலீசார் முயற்சித்தனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய அந்த கார்கள் சோதனைக்கு ஒத்துழைக்காமல் காரை ஓட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் குன்றகுடி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் குன்றக்குடியில் 2 கார்களையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தப்பிச்சென்ற அந்த கார்களில் 5 கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு காரையும் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் கொண்டு வந்து கூடுதல் விசாரணை செய்தனர். காரில் இருந்த சேலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த காமராஜ், கோயம்புத்தூரை சேர்ந்த சண்முகம் ஆனந்த், குமார் மற்றும் சென்னையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, மதுரை வருமானவரி துறை இணை இயக்குநர் ஸ்டாலினிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காரைக்குடி வந்தவரிடம் காவல்துறையினர் கைப்பற்றபட்ட பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட வருமான வரித்துறையினர், அதனை மதுரைக்கு எடுத்து சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் 5 கோடி ரூபாய் பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது?, ஏன் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகு கிடைக்கும் தகவலை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கார்களில் இருந்த கட்டைப்பைகளில் கத்தை, கத்தையாக இருந்தது. பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம் 5 கோடிக்கு மேலிருக்கும். இவர்களுக்கு எப்படி பணம், கிடைத்தது வேறு எதுவும் நெட் ஒர்க் செயல்படுகிறதா என, நவீன கருவிகள் மூலம் சோதனை செய்து வருகிறோம். முழு விசாரணை முடிந்த பின்புதான் எதையும் கூற முடியும்” என்றனர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !