கேரள மாநிலத்தில் அதிகமாக பயிரிட்டு விவசாயம் செய்யப்படும் ஏலக்காய்கள் இடுக்கி மாவட்டம் , தேனி மாவட்டத்தில் குரங்கணி, போடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விளையும் ஏலக்காய்கள் ஊரடங்கு எதிரொலியால் விற்பனை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இந்த பாதிப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சுமார் 4, 200  டன் ஏலக்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.


கேரளாவில் விளையும் நறுமணப் பொருட்களில் ஒன்றான ஏலக்காய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், கேரள மாநிலத்தில் அதிகமாக இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது . அதேபோன்று தேனி மாவட்டம் போடி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குரங்கணி உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் ஏலக்காய் விளைகிறது. இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ஏலக்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள போடி மற்றும் இடுக்கி மாவட்டம் புத்தடியில் உள்ள ஏலக்காய் நறுமண வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏலக்காய் ஏல மையங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆன்லைன் மூலமாக ஏலக்காய்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்,



இதையொட்டி தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஏலக்காய்களை விற்பனைக்காக இந்த இரண்டு மையங்களுக்கு எடுத்துச்சென்று ஏல விற்பனை அடிப்படையில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக போடி மற்றும் புத்தடி ஏலக்காய் ஏல மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்,  ஏலக்காய் தோட்டங்களில் விளைந்த ஏலக்காயை விவசாயிகள் விற்பனை செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தேனி மட்டும் இடுக்கி மாவட்டங்களில் பறிக்கப்பட்ட சுமார் 4200 டன் ஏலக்காய்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது .   இந்த தேக்க நிலை காரணமாக ஏலக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோவிற்கு 1200 ரூபாய்க்கு விற்ற ஏலக்காய் தற்போது கிலோவிற்கு 400 ரூபாயாக  சரிந்தது விற்பனையாகி வருகிறது.



ஏலக்காய் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது ஒரு புறம் இருக்க, ஏலத் தோட்டங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள் , இந்த சூழலில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையான வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தின் கெடுபிடியால் ஏலக்காய் தோட்டங்கள் வைத்திருக்கும் தேனி மாவட்ட விவசாயிகள் கேரள மாநிலத்தில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் ஏலக்காய் செடிகளை பராமரிப்பதில் விவசாயிகளுக்கு கடுமையான சிக்கல் உள்ள நிலையில் ஏலக்காயையும்  பறிக்க ஆளில்லாமல் செடியிலேயே அழுகி வீணாகி வருவதாக கவலையடைந்துள்ளனர்.  எனவே ஊரடங்கு விதிகளில் ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய தளர்வுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.