திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் 24 ஆம் தேதி நடைபெற்ற உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 75 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. அதன்படி 267 கிராம் தங்கம், 11.251 கிலோ வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
கடந்த 25 ஆம் தேதி இரண்டாவது நாளாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 690 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் 203 கிராம் தங்கம், 5357 கிராம் வெள்ளி, 44 வெளிநாட்டு கரன்சிகள் வருவாயாக கிடைத்தது. இந்த இரண்டு நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் இதில் 3 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரத்து 440 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம் 470 கிராம், வெள்ளி 16,608 கிராம், வெளிநாட்டு கரன்சி 119 கிடைத்தது.
அதைத்தொடர்ந்து நேற்று 27ஆம் தேதி 3 ஆவது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக 94 லட்சத்து 85 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம், 260 கிராம் தங்கம், 5,493 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 22 ஆகியவை கிடைத்தது. இவ்வாறு தைப்பூச திருவிழாவுக்கு பிறகு நடந்த உண்டியல் காணிக்கை மூலம் பழனி முருகன் கோயிலில் வருவாயாக மொத்தம் 4 கோடியே 14 லட்சத்து 45 ஆயிரத்து 630 ரூபாய் ரொக்கமும், 730 கிராம் தங்கமும், வெள்ளி 22.101 கிலோ வெள்ளியும், 141 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்ததுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்