சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா நம்மிடம்..,” சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலாங்குளம் பகுதியில் முன்னோர்கள் வழிபட்ட கோயில் ஒன்று தரையோடு இருந்ததை  புதிய கட்டமைப்பு செய்ய முனைந்த போது அதில் தலை உடைந்த நிலையில் கிடைத்த இலட்சுமி நாராயணர் கற்சிற்பத்தை தலையை ஒட்டி அருகில் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் கோவிந்தன் கொடுத்த தகவல் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.



 

துண்டுக்கல் வெட்டு.

 

கட்டமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய பொழுது முன்னும் பின்னும் சிதைவுற்ற துண்டுக் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதில் எட்டு வரிகள் உள்ளன. அதன் எழுத்தமைதியைக் கொண்டு 13ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். மாடக்குளம் கீழ் மதுரை என்ற சொல்லாலும் எதிராம் ஆண்டு கால வைப்பு முறையாலும் இது பாண்டியர் கல்வெட்டு என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் எந்த மன்னரது கல்வெட்டு என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.



 

 

கல்வெட்டு வரிகளாவன

 

1. திரிபுவந சக்கரவர்த்தி

2. நெதிரா மாண்டு மேஷநா

3. பெற்ற அத்தத்து நாள்கி

4. மாடக்குளக் கீழ் மதுரை

5. ப்ராமணம் பண்ணிக்

6...ரை உக்க திருளிவித்து

7.கு எல்லையாவது கீழ் எ

8.கும் தென் எல்லை வைகை.

 

கல்வெட்டு முன்னும் பின்னும் சிதைந்துள்ளதால் முழுமையான பொருள் கொள்ள இயலவில்லை,



 

நான்கு எல்லையில் தென் எல்லை வைகையாக குறிப்பிடப்பட்டுள்ளதாலும் பிரமாணம் பண்ணி எனும் சொல்லாலும் இது  நில தானத்தையும் அதற்கான எல்லையையும் குறிப்பிடுவதாக அறிய முடிகிறது. மேலும் இவ்விடமும் வைகைக்கு வடக்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் உக்க திருளிவித்து என்ற சொல் உகந்தருளிவித்து என்ற சொல்லாக இருக்க வேண்டும் என கல்வெட்டு ஆய்வு வல்லுனர் சாந்தலிங்கம்  அவர்கள் தெரிவித்தார்கள்.
  

 

முனியன் சாமி

 

பழமையான கோயில் இடி மானத்திலிருந்து பெருமாளுக்கு உரிய சின்னமான திருவாழிக்கல் பொறிக்கப்பட்ட நிலைக்கல் ஒன்றை அருகிலேயே முனியன் சாமியாக இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.   இவ்விடத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய சன்னலின் எஞ்சிய பகுதி ஒன்றும் காணப்படுகிறது. இவற்றைக் கொண்டு இவ்விடத்தில்   திருமாலுக்கான பெரிய கோயில் ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. மேலும் இப்பகுதி மக்கள் பெருமாளையும் அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பரையும் குலதெய்வமாக வணங்குகின்றனர். வேலூர் மற்றும் சோழங்குளத்தில் உள்ள மாயாவதாரன் நெற்களஞ்சியம், அருகில் உள்ள ஊரான ஸ்ரீரங்க நத்தம் போன்றவை பெருமாளோடு தொடர்புடையதாக உள்ளன. 



 

தீர்த்தம்.

 

இவ்வூர் மக்கள் அழகர் கோயிலில் உள்ள ராக்காச்சி அம்மன் தீர்த்தத் தொட்டியில் தீர்த்தமாடுவதை தங்களது விழாக்களில் முதன்மையானதாக கொண்டுள்ளனர் மேலும் இவர்களில் பலர் தீர்த்தம் என்னும் பெயரை இன்றும் தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர்.இவை இவர்களுக்கும் பெருமாளுக்குமான தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

 

மண்பானை ஓடுகள்.

 

இக்கோயில் அமைந்துள்ள பகுதி மேட்டுப்பகுதியாக உள்ளதோடு இப்பகுதியில் பழமையான பானை ஓடுகளும் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளும் காணக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு கிடைக்கப் பெற்ற இலட்சுமி நாராயணர் கோவில் புதிய கட்டுமானப் பணி மதுரை உயர்நீதிமன்ற மூத்த  வழக்கறிஞர் பாலசுந்தரம் அவர்கள் தலைமையிலான குழுவினரால் நிறைவுற்று விரைவில் குடமுழுக்கும் காணவிருக்கிறது என்று தெரிவித்தார்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண