திண்டுக்கல் கிழக்கு ரத வீதி, ஜான் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (54). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி கவிதா (45). இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி இரவு தங்களது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்போது நள்ளிரவில் கண்ணன் வீட்டின் மொட்டை மாடிக்கு 2 மர்மநபர்கள் ஏறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றனர்.



 

இதற்கிடையே மறுநாள் காலையில் கவிதா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருப்பதையும், அதிலிருந்த 145 பவுன் நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



 

இந்தநிலையில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலிசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (35), நவாஸ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து புளியங்குடி சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனர்.



 

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளில் 116 பவுன் நகைகளை அடகு வைத்ததும், மீதமுள்ள நகைகளை விற்று சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் அடகு வைக்கப்பட்டு இருந்த 116 பவுன் நகைகள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண