தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.,யாக அம்ரேஷ் பூஜாரி கடந்த மாதம் 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக அவா், தமிழகத்தின் முக்கிய சிறைச்சாலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி கடந்த 20-ம் தேதி ஆய்வு செய்தார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.



 

தொடர்ந்து கைதிகளுக்கு உணவு தயாா் செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை  சோதனையிட்டார். சிறை வளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.





 

கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில்  மதுரை மத்திய சிறையில், 100 கோடி ரூபாய் ஊழல் புகார் உறுதி செய்யப்படாத நிலையில், சர்ச்சைகளுக்கு எதிரொலியாக மத்திய சிறையில் உள்ள 12 அலுவலர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து, துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார்.
 




மதுரை மத்திய சிறையில் மட்டும்   சுமார் 1,850 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு பேக்கரி, மருத்துவ பேண்டேஜ் உட்பட பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதனால், கைதிகளுக்கு வருமானமும், சிறை நிர்வாகத்திற்கு வருவாயும் கிடைத்து வருகிறது.   இந்நிலையில், வெளிச்சந்தையில் பொருட்களை விற்றதில், ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக புகார் கிளம்பியது. தணிக்கை ஆய்வும் நடந்தது. ஊழல் நடந்ததாக இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், ஊழல் புகார்களுக்குள்ளான அலுவலர்கள், தொடர்ந்து மதுரையிலேயே பணிபுரிவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக  மதுரை சிறையில் நேரில் ஆய்வு செய்த டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி, இது குறித்து விசாரணை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று, 12 அலுவலர்களை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 



 

அதன்படி மதுரை சிறை அலுவலக சூப்பரெண்ட் மகேஸ்வரி, மேனேஜர் சித்திரவேல் புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பேக்கிங் பிரிவு கிளார்க் கதிரவன் புதுக்கோட்டைக்கும், உதவியாளர் முத்துலட்சுமி சேலத்திற்கும் இடமாற்றப்பட்டனர். இவர்கள் உட்பட மொத்தம், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 





 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர