நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 சவரன்  தங்க நகைகள் திருட்டு காவல்துறை விசாரணையில் திருடன் சிக்கினார்.

 

மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி அன்று நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியின் அண்ணன் முத்துராமலிங்கம் மகள்  திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விமல், நடிகர்  செந்தில், ஆர்யா, ரோபோ சங்கர் உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது திருமண விழாவை பயன்படுத்தி உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர் மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 5 சவரன் தங்க செயின், 3 சவரன் தங்க மாலை, 2 சவரன் தங்க ப்ரேஸ்லெட் உள்ளிட்ட 10 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 








திருமண விழா கூட்டத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் திருட்டில் ஈடுபட்டது குறித்து நடிகர் சூரியின் மேலாளர் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து,வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸ் தீவர விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.



இது குறித்து காவல்துறையினர் சிலர், ” கடந்த 9-ம் தேதி திருமணம் நடந்த அன்றே நகைகள் திருடு போய் உள்ளது. ஆனால் தாமதமாக தான் எங்களிடம் புகார் அளிக்கப்பட்டது. எனினும் தீவிரமாக சோதனை செய்ததில் திருடனை அடையாளம் கண்டுவிட்டோம். சூரி ரசிகர் என்ற போர்வையில் விக்னேஷ் என்பவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருடனிடம் தீவிர விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.