தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் திருச்சி மேற்கு தொகுதி சர்ச்சையில் சிக்கி சுழன்றுக்கொண்டிருக்கிறது.
இந்த தொகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் மாநகர காவல் ஆணையர் லோகநாதனும் தேர்தல் பறக்கும் படையினரும் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, காவல்நிலையங்களில் உள்ள காவலர்களின் தகுதிவாரியாக கவர்களில் வைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 6 காவலர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, பல இடங்களில் மக்களுக்கும், காவலர்களுக்கும் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் வருவதாக கூறப்படும் நிலையில், திருச்சி மேற்கில் தேர்தலை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கலாமா என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் அளித்துள்ள திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு. அவர் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில் "நான், 140 திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் தற்சமயம் திமுகவின் முதன்மை செயலாளராக உள்ளேன். இன்று (27.03.2021) தினசரி நாளிதழ் ஒன்றில் 140 திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியிலும் வேறு சில சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலை நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
"இப்போது சமூக வலைதளங்களிலும், முகநூல் ட்விட்டர் பக்கங்களிலும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு என்னை தொடர்புபடுத்தியும், செய்தி வெளியாகி உள்ளது. இது வேண்டுமென்றே திட்டமிட்டு என்னுடைய புகழை களங்கப்படுத்துவதற்காக பொய்யாக வெளியிடப்பட்டுள்ளது."
"இந்த செயல் என்னுடைய தேர்தலை தடுப்பதற்காகவும் என் பெயரை களங்கப்படுத்துவதற்காகவும் பொய்யென தெரிந்தும் பரப்பப்படுகின்றது. ஐயா அவர்கள் உடனடியாக இது விஷயமாக தலையிட்டு இதுபோன்ற பொய் செய்திகள் வலம் வருவதை தடுத்து நிறுத்தியும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.