கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் கவிதா தலைமையில் நடந்தது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க கூடாது மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.


கவுன்சிலர் தண்டபாணி (மா.கம்யூனிஸ்ட்)


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் அருகில், மனோரா கார்னர், ஆர்.எம்.எஸ், தபால் நிலையம், கரூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்கள் போக்குவரத்து நெரிசல் பகுதி என்பதால், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த அனுமதி இல்லை என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் தடுக்கும் வகையில் உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் பொதுக்கூட்டங்கள் வெங்கமேடு அண்ணாதுரை சிலை அருகில், 80 அடி சாலை, சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், உழவர் சந்தை, லைட்டோஸ் கார்னர், வேலுச்சாமிபுரம், பசுபதிபாளையம் ரவுண்டானா, காந்திகிராமம் டேங்க், தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் ஆகிய 9 இடங்களில் நடத்தவும், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை நடத்த அனுமதி இல்லை எனவும், கரூர் நகரம் தலைமை தபால் நிலையம் அருகிலும், தாந்தோணி மலையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரும், வேலுச்சாமிபுரம் நாலாவது கிராஸ் அருகிலும், வெங்கமேடு வாங்கப்பாளையம் போலீஸ் பூத் அருகிலும் என்று மொத்தம் நாலு இடங்களில் நடத்த அனுமதிப்பது என்ற தீர்மானம் முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.


கவிதா (மேயர்)



போக்குவரத்து நெரிசல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 






 


தண்டபாணி ( கம்யூனிஸ்ட்)


அரசியல் கட்சிகள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தங்களின் உரிமைகளை நிலை நாட்ட தான் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே, கரூர் நகரில் எங்கு எங்கு போராட்டம் உண்ணாவிரதம் நடத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சியினர், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து முடிவு எடுக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நாம் மீண்டும் இது போன்ற கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கலாம். எனவே இந்த தீர்மானம் முன்மொழிவை நிறைவேற்ற வேண்டாம்.


ஸ்டீபன் பாபு ( காங்கிரஸ்)


கரூர் ஆர்.எம்எஸ் முன்பு காங்கிரஸ், திமுக என்று சர்வ கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. இந்நிலையில் அங்கு நடத்த வேண்டாம் என்பது சரியானதாக இருக்காது இந்த தீர்மானத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


கவிதா (மேயர்)


இந்த தீர்மானம் முன்மொழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது உங்கள் கருத்துக்களை கூறிவிட்டீர்கள். தீர்மானம் முன்மொழிவை எதிர்ப்பவர்கள் கையை உயர்த்தலாம். தண்டபாணி ஸ்டீபன் பாபு ஆகிய இரண்டு பேர் மட்டும் கையை உயர்த்தினார். முன்மொழியை ஆதரிப்பவர்கள் தங்கள் கையை உயர்த்தலாம் என்றார் மேயர்.திமுக கவுன்சிலர்கள் அனைவரும் மற்றும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் கையை உயர்த்திட, பெரும்பான்மையானவர்கள் கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்ததால், இந்த தீர்மான முன்மொழிவு ஏக மனதாக நிறைவேறியது. இந்த முன்மொழிவின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் அனுமதி வழங்கிட ஏதுவாக கலெக்டர் மூலமாக காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் மேயர்.


 




 


 


ஸ்டீபன் பாபு ( கவுன்சிலர்)


தனது வார்டில் சாக்கடைகள் கட்டப்பட்ட நிலையில் சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நீல நிற பைப்பிற்கு ஒட்டுமொத்தமாக பணம் கட்டுமாறு கூறுகின்றனர். என் 4வது வார்டில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், சாலையில் நடமாட கூட முடியாத நிலை உள்ளது. எங்கள் பகுதியில் மட்டுமல்லாது வெங்கமேடு பகுதி முழுவதும் அப்படித்தான் உள்ளது.


கவிதா (மேயர்)


நீங்கள் பாட்டுக்கு கத்திட்டு இருக்கீங்க... நான் தான் பதில் சொல்லிட்டு இருக்கேன். இது பற்றி ஆபீஸ் ரூம் வந்து சொல்லுங்க.


ஸ்டீபன் பாபு (கவுன்சிலர்)


நான் வந்து அதிகாரியிடம் கேள்வி கேட்கிறேன். உங்களிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.


நக்கீரன் (மாநகராட்சி பொறியாளர்)


பணிகள் அடுத்தடுத்து தொடங்கப்படும். விரைவில் உங்கள் பகுதிகளிலும் பணிகள் தொடங்கப்படும். நீல நிற பைப்பிற்கான தொகையை ஒட்டுமொத்தமாக கட்ட முடியவில்லை என்றால் பிரித்துக் கட்டலாம்.


 




 


 


 கவிதா (மேயர்)


மாநகராட்சி சார்பில் சாலை உட்பட பணிகளுக்கு டெண்டர் தான் அறிவிக்க முடியும். உங்கள் வார்டு டெண்டர் ஏன் எடுக்கவில்லை என்பதற்கு நீங்கள் காரணம் சொல்ல வேண்டும். இவ்வாறு மேயர் கவிதாவிற்கும் காங்கிரஸ் கவுன்சிலர் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது.


பால வித்யா (திமுக)


உழவர் சந்தை எதிரில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் எவ்வித உபயோகமும் இன்றி உள்ளதால், அதனை அப்புறப்படுத்திவிட்டு பஸ் நிறுத்தம் , நிழற்குடை அமைக்க வேண்டும்.


வேலுச்சாமி (கவுன்சிலர் திமுக)


மாநகராட்சியில் உள்ள பல அரசு பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் செல்வதில்லை. இதனால், பள்ளி ஆசிரியர்களே கழிப்பறை சுத்தம் செய்யும் நிலை தொடங்குகிறது.


பாண்டியன் (திமுக)


வாங்கப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஏடிஎம் மிஷின் மற்றும் நிழற்கூடை பயன்பாட்டின்றி உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. அக்கூட்டத்தில் மொத்தம் 39 தீர்மானங்களும், அவசரக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் என மொத்தம் 40 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.