கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் குழுவின் தலைவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட வளர்ச்சி மேற் கொள்ளப்பட்ட திட்டங்கள் மேலும் புதிய திட்டங்கள் குறித்த ஆய்வு நடத்தினார். 




பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் :-


கரூர் மாவட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத்திட்டம் ,பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டம், மண்வள அட்டை இயக்கம், தேசிய சமூகப்பாதுகாப்புத் திட்டம், அன்னபூர்ணா திட்டம் உள்ளிட்ட 44 வகையான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்கும் எந்தெந்த வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. 




கரூர் மாவட்டம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை நீக்க மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ளபடி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, க. பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தனித்தனி கூட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக 450 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதுமே குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் அவர்கள் மீதான பல்வேறு வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.




பஞ்சாயத்து அளவில் குழுக்களை அமைத்து கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு மருத்துவராக இருப்பதால் கொரோனா தொற்றின் 3ம் அலையை தடுப்பது சுலபம். மூன்றாம் தொற்றால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக அதை முன்னெச்சரிக்கையாக தடுப்பது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கொரோனா தொற்றில் சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சையை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் பிரச்சனையில்லை மாவட்ட அமைச்சரும் மாவட்டம் முழுவதும்  அதிக அளவிலான படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி உள்ளார் எம்பி நிதி உதவியின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன என எம்.பி் கூறினார். 




இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ(அரவக்குறிச்சி) க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் தொகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் வானிஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.