Karthigai Deepam Festival: தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாவாக, கார்த்திகை தீபத் திருவிழா இருந்து வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகளில் எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த மாதம் கார்த்திகை
தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு கோயில்களில் விமர்சையாக தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கார்த்திகை தீபம் வருகின்ற டிசம்பர் 03 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அகல் விளக்கில் ஏற்றுங்கள்...
கார்த்திகை தீபம் திருவிழாவின்போது, வீடுகளில் அகல் மூலம் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏராளமான விளக்குகள் இருந்தாலும், குறைந்தபட்சம் வீடுகளில் 3 அகல் விளக்குகளாவது ஏற்றுவது நன்மை கொடுக்கும். வீடுகளில் 27 அல்லது 31 அகல் விளக்குகள் ஏற்றுவது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.
தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன ?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றுவது சரியாக இருக்கும். திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும், சிவபெருமான் நமது வீடுகளிலும் ஜோதி வடிவாக காட்சி தருவது, ஐதீகமாக பார்க்கப்படுகிறது. எனவே மாலை 6:00 மணிக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்ற தொடங்கலாம் அல்லது உங்கள் வீடு எங்கே இருக்கும் முக்கிய கோவில்களில், மகா தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால் கோவிலில் தீபம் ஏற்றிய பிறகு உங்கள் வீடுகளில் தீபம் ஏற்றலாம்.
எந்தத் திரியில் விளக்கு ஏற்றலாம்?
பிற நாட்களில் பல்வேறு திரிகளை பயன்படுத்தி நாம் வீடுகளில் விளக்கேற்றினாலும், திருக்கார்த்திகை தீபத்தன்று, வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி அல்லது தூய காட்டன் திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது மிக உத்தமகமாக பார்க்கப்படுகிறது. தாமரை மற்றும் வாழைத்தண்டு திரி கிடைக்காதவர்கள் தூய காட்டன் திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
வளமான வாழ்வு தரும் நல்லெண்ணெய் !
பசு நெய்யால் விளக்கேற்றினால் - மனம் ஒருமித்த வளமான வாழ்வு தரும்.
நல்லெண்ணெய் விளக்கேற்றினால் - செல்வ வளம் செழிக்கும் மற்றும் வளமான வாழ்க்கை.
விளக்கெண்ணெய் விளக்கேற்றினால் - புகழ் சேரும்.
வேப்ப எண்ணெய் விளக்கேற்றினால் - கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குடும்பத் தகராறுகள் நீங்கும்.
தேய்காய் எண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும்.
இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் - ஐஸ்வரியும் பெருகி, வீட்டில் மன நிம்மதி ஏற்படும்.